ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி துணை முதல்வரின் ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் கடந்த மார்ச் 31ம் தேதி, மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவினை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், மணிஷ் சிசோடியா முதன்மையான குற்றவாளி என்றும், அவருக்கும் டெல்லி அரசாங்கத்திலுள்ள அவரது சகாக்களுக்கும் ரூ.90-100 கோடி முன்பணமாக கொடுத்ததாக கூறப்படும் குற்றத்தில், அவர் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா மனு தாக்கல் செய்தார். அம்மனுவினை இன்று விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, ‘டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில், மணிஷ் சிசோடியா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக உள்ளது. அதனால் இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது’ எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related posts

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்: போலீஸ் விசாரணை