என்னை திட்டுவதற்கு காங்கிரஸ் ஒருநாளும் மறந்ததில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சித்தி: தன்னை திட்டுவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் மறந்ததில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு வரும் 17ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜ.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் என்னை திட்டுவதற்கு ஒருநாளும் மறந்ததில்லை.

நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் ஜனாதிபதியாவதைக் கூட காங்கிரஸ் எதிர்த்தது. பழங்குடியினர் ஓட்டுகள் மீது மட்டுமே காங்கிரசுக்கு அக்கறை உள்ளது. அவர்களது நலன்களின் மீது அல்ல. நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக பொறுப்பேற்ற விழாவில் கூட, அழைப்பிதழ் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும், காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை,” என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், “ஊழல்களை ஒழித்ததன் மூலம் அதனால் மிச்சமாகும் பணத்தை அரசு ஏழைகளுக்கான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடுகிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ரூ.13,000 கோடி செலவிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

* நக்சலைட்டுகளுக்கு தைரியம்
சட்டீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூரில் நடந்த பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போதெல்லாம் நக்சல் மற்றும் தீவிரவாதிகள் தைரியத்துடன் வலம் வருகின்றனர். குண்டுவெடிப்பு, கொலை சம்பவங்கள் பற்றிய செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் அங்கு குற்றம், கொள்ளை சம்பவங்கள் நிலவும்,” என்று குற்றம் சாட்டினார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு