தஞ்சாவூரில் 7200 ஹெக்டேரில் சாகுபடி கடலை அறுவடை பணி 90% நிறைவு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடலை அறுவடை 90 சதவீதத்திற்கும் மேல் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறும். மேலும் பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடியும் செய்யப்படும். இதை தவிர கடலை, எள், உளுந்து, பயறு, கரும்பு போன்றவையும் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிகளவு நடைபெற்றது.

அதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடலை சாகுபடியும் அதிகளவில் பயிரிடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 7200 ஹெக்டேருக்கும் மேல் கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடைப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.விவசாயத் தொழிலாளர்கள் கடலை செடிகளை பறித்து காயவைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதத்திலிருந்து தஞ்சை மாவட்டத்தில் கடலை அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவை பணிகளில் விவசாயிகள் மும்மரமாக இறங்கி உள்ளனர். கடலைக்கு நல்ல விலை கிடைப்பதால் உடனுக்குடன் அவற்றை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

முக்கியமாக கடலையை காயவைத்து எண்ணெய்க்காக விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகமா உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் பெய்த மழை, கடலை பயிருக்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கடலை சாகுபடி அதிக மகசூல் கண்டதாகவும், விலையும் கூடுதலாக கிடைப்பதாக தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தெரிவித்தார்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்