கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது; அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்பு

கோவை: கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது. பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி செல்கிறார். பிரதமர் மோடி பயணிக்கும் அதே வாகனத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடக்கவிருக்கின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி.

இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை, கோவை விமான நிலையம் முதல் சாய்பாபா காலனி வரை சாலையின் இரு புறங்களிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவையில் பாஜக வாகன பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் முதன் முறையாக நடைபெறுகிறது. இந்த ரோட் ஷோ பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டிவி சாமி சாலை வழியாக ஆர் எஸ் புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் முடிவடைகிறது. இந்த வாகனப் பேரணியில் பிரதமர் மோடி 500 மீட்டர் தூரம் சாலையில் நடந்து செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்

கடைசி கட்டதேர்தல்: 57 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை அதிமுக முகவர்கள் வெளியேறக் கூடாது: எடப்பாடி உத்தரவு