நாடாளுமன்றத்தில் சோழர் கால செங்கோல் நிறுவப்படும்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் சோழர் கால செங்கோல் நிறுவப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்து வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில்,நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை இன்னும் சிறப்பாகும் விதமாகவே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருக்கிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்படும். தமிழ்நாட்டில் தயார் செய்யப்பட்ட செங்கோலை ஆங்கிலேய அரசின் கடைசி கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் இந்தியாவின் முதலாவது பிரதமர் நேருவிடம் வழங்கினார்.

அந்த செங்கோல் தற்போது பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் இருப்பது பற்றி பிரதமர் மோடி கேள்விப்பட்டார். அந்த செங்கோலை சோழர் கால முறைப்படி நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்கு பிரதமர் உத்தரவிட்டார். சோழர் காலத்தில் ஒரு அரசரிடம் இருந்து இன்னொரு அரசருக்கு அதிகாரம் மாறும்போது செங்கோல் வழங்கப்படும். சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்.

கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி ராஜேந்திர பிரசாத்( பின்னர் ஜனாதிபதி ஆனார்) முன்னிலையில் நேருசெங்கோலை பெற்று கொண்டார். தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல் வெள்ளியால் செய்யப்பட்டது. செங்கோலின் தலைப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள நந்தி உருவம் நீதியை குறிக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்படும். செங்கோல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட உம்மிடி எத்திராஜூலு(96) மற்றும் உம்மிடி சுதாகர்(88) ஆகியோரை பிரதமர் கவுரவிப்பார். கட்டுமான பணிகளில் ஈடுபட்ட 60 ஆயிரம் தொழிலாளர்களும் கவுரவிக்கப்படுவர்’’ என்றார்.

திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய சோழர் கால செங்கோல்: இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த நிலையில் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன்,சுதந்திரம் வழங்குவதற்கு முன்பாக இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை அழைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது என கேட்டுள்ளார். இதையடுத்து நேரு,ராஜாஜியிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். அப்போது ராஜாஜி, தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அதே போல் நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல் பெற்று ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதை அடையாளப்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளார். அதை ஏற்று கொண்ட நேரு, அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார். அதன்படி பழமையான சைவ சமய மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதின மடத்தின் 20வது குரு மகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்பு கொண்ட ராஜாஜி இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான புண்ணிய சடங்குகளை செய்து தருமாறும் செங்கோலை நீங்கள்தான் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார். திருவாவடுதுறை ஆதினம் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் உள்ள பிரபல நகை கடையான உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் நகை கடையில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் தயாரிக்கப்பட்டது.

ஆதினத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்ற ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான், ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் டெல்லிக்கு விமானத்தில் சென்று செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் குமாரசாமி தம்பிரான் ஒப்படைத்தார். பின்னர் செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் இருந்து வாங்கி நேருவிடம் கொடுத்தார்.

இதற்கிடையே, திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வரும் 28ம்தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க இருக்கிறேன்’’ என்றார்.

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்