சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்

ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. அதன்பின் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி வெளியூர்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னிதீர்த்தக் கடற்கரையில் குவிந்தனர். கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதை தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி முதல் நாளை (மே 8) வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி அமாவாசை தினமான இன்று சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அதிகாலையில், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் குவிந்தனர். காலை 6 மணியளவில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பலவகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

Related posts

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்