திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 10ம்தேதி தேரோட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பிரமோற்சவம் விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வரும் 10ம் தேதி நடக்க உள்ளது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆதிவராகப் பெருமாள், தமது இடது தொடையில், அகிலவல்லி தாயாரை அமர்த்தியும், இடது திருவடியை தம்பதியாய் இருக்கும் ஆதிஷேசன், வாசுகி மீதும், மற்றொரு திருவடியை பூமாதேவியாதி…. நிலத்தில் ஊன்றியும், நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு, காலவ முனிவரின் 360 மகள்களை, தினம் ஒரு மகள் வீதம், 360 பெண்களையும் மணம் புந்து கொள்வதால் நித்ய கல்யாண பெருமாள் என பெயர் பெற்றார்.

இதனால், திருமணமாகாதவர்கள், இக்கோயிலுக்கு வந்து வேண்டி மாலை போட்டுக் கொண்டு சாமியை சுற்றி ஒன்பது சுற்றுகள் வலம் வந்தால் தடை நீங்கி, திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். அசுர குலகாலநல்லூர் வராகபுரி, நித்யகல்யாணபுரி என்கிற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் எம்பெருமான் பிராட்டியை இடது பக்கத்தில் வைத்திருப்பதால் திருவிடந்தை எனப் பெற்றது. இது நாளடைவில், மறுவி திருவிடந்தை எனப் பெயர் மாறியது. இக்கோயிலில், சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், திருவிடந்தை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த, விழா வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று அன்ன வாகன சேவை நடந்தது.

இதனை தொடர்ந்து, இன்று சிம்ம வாகன சேவை, நாளை சிறிய திருவடி சேவை, 7ம்தேதி புன்னையடி சேவை, 8ம்தேதி கருடசேவை, 9ம்தேதி யானை வாகன சேவை, 10ம்தேதி தேர் வீதி உலா, இரவு தோளுக்கு இனியான் சேவை, 11ம்தேதி குதிரை வாகன சேவை, 12ம்தேதி சந்திர பிரபை, 13ம்தேதி தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை: திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவிற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இதனால், அந்த 10 நாட்கள் மட்டும் கோவளம் வரை இயக்கப்படும் அனைத்து மாநகர பஸ்களும் திருவிடந்தை வரை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சில்லிபாயிண்ட்….

இந்தோனேசியா ஓபன் கால் இறுதியில் லக்‌ஷயா

நியூயார்க்கின் புதிய ஆடுகளத்தில் எப்படி ஆடுவது தெரியவில்லை: குழப்பத்தைச் சொன்ன ரோகித்