சென்னையில் இருந்து பாங்காக்கிற்கு ரூ.2.33 கோடி வைரக் கற்கள் கடத்த முயன்ற பயணி கைது: மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிரடி

சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி மதிப்புடைய வைரங்களை கடத்த முயன்ற சென்னை பயணியை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரம் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கடந்த 7ம் தேதி ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படை பிரிவினர் 7ம் தேதி இரவில் இருந்து சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டு, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்ல வந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி, சுற்றுலா பயணியாக தாய்லாந்து செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டனர்.

அந்த கைப்பைக்குள் இருந்த பார்சல்களில், புத்தம் புதிய வைரக் கற்கள் மின்னிக் கொண்டிருந்தன. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, அவரை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அதில் அவருடைய கைப்பை மற்றும் அவர் அணிந்திருந்த உள்ளாடைக்குள் விலை உயர்ந்த வைரக் கற்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் அவரிடம் இருந்து 1004 கேரட் வைரக் கற்களை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.33 கோடி. இதையடுத்து அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை