சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி புதிய படுக்கை அணை கட்டும் பணி நிறைவு நிலையை எட்டியது-விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் சுமார் ஆயிரம் ஹெக்டேர் பயன்பெறும் வகையில் குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த படுக்கை அணையை அப்புறபடுத்தி விட்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட புதிய படுக்கை அணை கட்டும் பணி முடிவுநிலையை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மணல் அள்ள பட்டதாலும் ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகள் அகற்றப்பட்ட தாலும் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் மட்டுமே பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இதே நிலைமை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட பூண்டி வாய்க்கால் சந்தன வாய்க்கால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தில்லையம்பூர் ஆகியவற்றிற்கு ஏற்பட்டது இதையடுத்து வாய்க்கால்களின் தலைப்பிற்கு அருகே குடமுருட்டி ஆற்றில் படுக்கை அணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர் .

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் அதன் தலைப்பு பகுதி அருகே குடமுருட்டி ஆற்றில் சந்திரசேகரபுரம் பகுதியில் படுக்கை அணை கட்டப்பட்டது. இருப்பினும் இந்த அணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய காலத்திலேயே தனது ஆயுளை முடித்துக் கொண்டது.

அதனை அடுத்து சுமார் ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகளின் கோரிக்கை தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதனை அடுத்து சில லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிகமாக மரம் மற்றும் மணல் மூட்டைகள், கற்கள் ஆகியவைகளை கொண்டு அடைக்கப்பட்டது. இருப்பினும் இது உரிய பலனை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தரவில்லை.இதனால் பொதுப்பணித் துறைக்கு வருவாய் இழப்பும் விவசாயிகளுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா தில்லையம்பூர் விவசாயிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆதிச்ச மங்கலம் விருப்பாச்சிபுரம் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சந்தன வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆகியோர் குடமுருட்டி ஆற்றில் மீண்டும் தரமான படுக்கை அணை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்துகாவிரி உட்கோட்டத்தில் உள்ள நீர்ப்பாசன வுட் கட்டமைப்புகளை நீட்டித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தில் அதற்கான மதிப்பீடுகள் பொதுப்பணித் துறையின் மூலம் சுமார் 97.91 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

முதல் கட்டமாக பழுதடைந்த நிலையில் இருந்த பழைய படுக்கை அணை யிணை இயந்திரத்தின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பணிகள் துவங்கப்பட்டு இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. அப்போது தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்குமுன்கூட்டியே திறக்கப்பட்டது அதனை அடுத்து பணிகள் முழுமை அடையாமல் சுமார் 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் தற்போது பணிகள் மீண்டும் துவங்கி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது . மேலும் குடமுருட்டு யாரு பிரிவு சந்தன வாய்க்கால் ரெகுலேட்டர் பழுதடைந்த நிலையில் அவற்றிற்கு பதிலாக புதிதாக ரெகுலேட்டரும் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டுமான பணிகள் முடிவுறும் நிலையை எட்டியதை அடுத்து தில்லையம்பூர் வாய்க்கால் பூண்டி வாய்க்கால் சந்தன வாய்க்கால் பாசன தார விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். திமுக ஆட்சியில் குடமுருட்டி ஆற்றில் சந்திரசேகரபுரம் பகுதியில் புதிய படுக்கை அணை கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்