தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!.

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செமீ கோடை மழை பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 14, 15-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16, 17, 18 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணையில் 8, நீலகிரி மாவட்டம் ஆதார் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 7, மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும். அதன்பின்னர் 16-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி