காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: இன்று இறுதி முடிவு எடுக்கப்படுகிறது

புதுடெல்லி: ‘அடுத்த 15 நாட்களுக்கு, காவிரியில் இருந்து 5000 கனஅடி நீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும்’ என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்று நடக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுதொடர்பாக இறுதி முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 நாட்களில் முடிவெடுக்க கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது.

இதில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக நீர்வளத்துறை தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வைத்த கோரிக்கையில், ‘‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 45.05 டிஎம்சி நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். மேலும் செப்டம்பர் மாதத்திற்கான 36 டி.எம்.சி நீரை கால தாமதம் செய்யாமல் கொடுக்க உத்தரவிட வேண்டும். கர்நாடகா அரசு அதிகப்படியான நீரை கொடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வழங்கினாலே எங்களுக்கு போதுமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரை மேலும் பத்து நாட்களுக்கு காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். இதில் மழையின் அளவை காரணமாக காட்டக்கூடாது. பாசனத்திற்கு தண்ணீர் விடாமல் நீர் தேக்கங்களில் தண்ணீரை சேமிக்க கர்நாடகா அரசு முயற்சிக்கிறது. அது எந்தவிதத்திலும் ஏற்க கூடியது கிடையாது. மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்தால் தான் நடப்பாண்டு குறுவை சாகுபடியை தமிழ்நாட்டில் மேற்கொள்ள முடியும். இவை அனைத்தையும் ஒழுங்காற்று குழு கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு அதிகாரிகள், ‘‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தற்போது வினாடிக்கு 1900 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வேண்டுமானால் கூடுதலாக வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் திறக்க முயற்சிக்கிறோம். அதுவும் எங்களது மாநிலத்தில் நிலவும் மழையை அடிப்படையாகக் கொண்டு தான் நடைமுறைப்படுத்த முடியும். மழை இல்லை என்றால், மிகவும் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கும். இதுதொடர்பாக எங்களது தரப்பு சாதக, பாதகங்களை காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தின் போது எடுத்து கூறுகிறோம்’’ என தெரிவித்தனர்.

இதேபோன்று காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் புதுவை மற்றும் கேரளா அரசு தரப்பு அதிகாரிகளும் தங்களது மாநிலங்கள் தொடர்பான கோரிக்கைகளை ஒழுங்காற்று குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை, அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு திறந்து விட பரிந்துரை செய்யப்படுகிறது.

இது காவிரி ஆணையத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 19ம் தேதி நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரையின் அடிப்படையில் இன்று நடக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தின் போது அனைத்தையும் ஆய்வு செய்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகா எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 45.05 டிஎம்சி நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடகா அரசு திறந்து விட தமிழ்நாடு கோரிக்கை.
* விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட வலியுறுத்தல்.
* தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை, அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்