காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறக்காமலேயே தமிழ்நாட்டுக்கு 6,500 கனஅடி நீர் செல்கிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதுடன், தமிழ்நாட்டிற்கு கேஆர்எஸ் அணையிலிருந்து நீர் திறக்கப்படாமலேயே 6500 கனஅடி நீர் சென்று கொண்டிருப்பதாக துணை முதல்வரும் மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த செப்டம்பர் 26ம் தேதி பெங்களூருவிலும், 29ம் தேதி மாநில அளவிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 2 முறை தலா 15 தினங்களுக்கு வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்கே கர்நாடக விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துத்தான் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பெங்களூருவில் நேற்று பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ’கடந்த சனிக்கிழமை மதியமே காவிரி மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதேசமயம், அணைக்கு நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்திருப்பது நற்செய்தி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள மக்களும் விவசாயிகளும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். அணைக்கு நீர்வரத்து இதேபோல இருந்தால் எந்த பிரச்னையுமில்லை. நம் மாநில விவசாய பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படும். பெங்களூரு, மண்டியா, கொள்ளேகால், ஹனூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்வதால் கடந்த 3-4 நாட்களாக கேஆர்எஸ் அணையிலிருந்து நீர் திறந்துவிடாமலேயே தமிழ்நாட்டிற்கு 6500 கனஅடி நீர் சென்று கொண்டிருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. இன்னும் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை