முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

சென்னை: முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. யூடியூபர் சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், போலீஸ் உயர் அதிகாரி மற்றும் பெண் போலீசார் குறித்து விமர்சனம் செய்து ஆட்சேபகரமான வீடியோ பதிவு வெளியிட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் இவர் ரிசார்ட்டில் தங்கி இருந்தபோது அவர் பயன்படுத்திய காரில் கஞ்சா இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சென்னையில் 2 பெண்கள் அளித்த புகாரின்பேரிலும் சங்கர் மீது பெண் போலீசார் குறித்து ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று காலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை பெண் போலீசார் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கு விசாரணைக்காக சென்னை போலீசார் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் இன்று யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின் நாளை விசாரிப்பதாக நீதிபதி சுவாமிநாதன், பாலாஜி அமர்வு அறிவித்துள்ளது.

இதனிடையே விசாரணையின்போது, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும். சவுக்கு சங்கர் முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார். இதை ஏற்க முடியாது என்றனர். சிறையில் தாக்கப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!