கொடைக்கானலில் கண்கவர் படகு அலங்காரப் போட்டி


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும் இந்தாண்டு மலர் கண்காட்சி கடந்த 17ம் தேதி பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது. அன்று முதல் தினசரி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் ஏரியில் படகு அலங்கார போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை ஆகிய அரசு துறைகளின் சார்பில் படகு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த படகில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சுற்றுலாத்துறை படகில் ஜல்லிக்கட்டு மற்றும் ஏறு தழுவுதல் உருவங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தோட்டக்கலைத் துறை படகில் கார்னேஷன் மலர்களால் வாத்து உருவம் அமைக்கப்பட்டிருந்தது. மீன்வளத்துறை படகில் மீன்வளர்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதில், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் உருவங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இந்த படகு அலங்காரப் போட்டியில் ஊரக வளர்ச்சித்துறை முதல் பரிசையும், மீன்வளத்துறை இரண்டாம் பரிசையும் பெற்றது. படகு அலங்கார அணி வகுப்பை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர்.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்