மாரடைப்பால் பஸ் டிரைவர் உயிரிழப்பு 62 பயணிகளின் உயிரை காப்பாற்றிய கண்டக்டர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அரசு பஸ் டிரைவர் திடீரென மாரடைப்பால் இறந்த நிலையில், 62 பயணிகளின் உயிரை கண்டக்டர் காப்பாற்றினார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த முகேஷ்ராஜா(54) ஓட்டினார். மதுரை ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்த திருப்பதி(39) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 62 பயணிகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சேதுராஜபுரம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் முகேஷ்ராஜா மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்டக்டர் திருப்பதி, உடனடியாக டிரைவர் சீட்டில் அமர்ந்து பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் டிரைவர் முகேஷ்ராஜாவை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த முகேஷ்ராஜாவிற்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு

பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு