ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை மனதளவில் அடிமையாக்க அனுப்பப்பட்டவர் மெக்காலே: ராஜ்நாத் சிங் பேச்சு

டேராடூன்: ‘நாட்டின் பாரம்பரிய கல்வி முறையை தடுக்கவும், இந்தியர்களை மனதளவில் அடிமைப்படுத்தவும் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர் மெக்காலே’ என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் பதஞ்சலி குருகுலத்திற்கு அடிக்கல் நாட்டிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆங்கிலேயர்கள் ஆட்சியில், இந்தியர்களை மனதளவில் அடிமைப்படுத்த அனுப்பட்டவர்தான் மெக்காலே. ஐரோப்பிய நூலகத்தில் உள்ள ஒரு அலமாரி, இந்தியாவின் அனைத்து கலாச்சார மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை விட உயர்வானது என்றார். வேதங்கள், உபநிடதங்கள், கீதைகளை உருவாக்கிய இந்தியாவைப் பற்றி அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மெக்காலேவின் கல்வி முறை, இந்தியாவின் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் தமது சொந்த கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்தது. இந்த பாதிப்பிலிருந்து விடுபட குருகுலத்தின் மறுமலர்ச்சி அவசியம். இவ்வாறு அவர் பேசினார். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் கடந்த 1835ல் அமைக்கப்பட்ட பொது கல்விக்குழு தலைவராக இருந்தவர் மெக்காலே. சமஸ்கிருதம், அரபு வழிக்கல்விக்கு பதிலாக ஆங்கில வழியில் அறிவியல் கற்பிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர். இந்தியாவில் ஆங்கில வழிக்கல்வி நுழைய முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி

10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி

மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி