அவிநாசி கோயிலுக்குள் புகுந்து சிலைகள், கலசங்கள் உடைப்பு: வாலிபர் கைது

அவிநாசி: அவிநாசி லிங்கேசுவரர் கோயிலுக்குள் நள்ளிரவில் புகுந்து சிலைகள், கலசங்களை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோயில் நடையை நேற்று அதிகாலை அர்ச்சகர்கள் திறந்தனர். அப்போது கோயிலுக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததையும், பல சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 63 நாயன்மார்கள் உள்ள சிறிய கோபுரங்களின் கலசம் மற்றும் சிலைகள் மீது உள்ள துணிகள் களைந்து கிடந்தன. தகவலறிந்து கோயில் நிர்வாகத்தினர் , அவிநாசி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து கோபுர கலசங்களை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. கோயில் கருவறைக்குள் புகுந்து சுவாமியின் அலங்காரத்தை களைத்து வேல், சேவல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வீசியதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோபுரத்தின் உச்சியில் டிரவுசர் மட்டும் அணிந்த வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவிநாசி அருகே சாவக்கட்டுப்பாளையம் வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பதும், வீட்டை விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யாரிடமும் கூறாமல் வெளியேறியவர் என்பதும் தெரியவந்தது. நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை என்றும், உண்டியல் உடைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எதற்காக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது? என தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில், கோயில் கருவறைக்குள் வாலிபர் சென்றதால் அர்ச்சகர்கள் கும்ப கலசங்களை வைத்து நேற்று மதியம் பரிகார பூஜைகளை நடத்தினர்.

Related posts

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!

ராமநாதபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயம்..!!

ரெட் அலர்ட்: குமரிக்கு பேரிடர் மீட்பு குழு வருகை