காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு கொடுத்ததால் பூட்டியே கிடக்கும் பாஜ அலுவலகம்

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட பாஜவினர் ஆர்வமாக இருந்தனர்‌. இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் முக்கிய இடத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தை ரூ.3 லட்சத்திற்கு வாடகை எடுத்தனர். தடபுடலாக பிரதமர் மோடி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் படங்களை போட்டு அலுவலகம் திறந்தனர்‌. பாஜ கூட்டணியில் திடீரென சேர்ந்த பாமகவுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இதனால், அப்செட்டான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர்கள் ஆர்வம் இழந்தனர். பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் என்பவரை பாஜ கூட்டணியில் காஞ்சிபுரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்ட மண்டபத்தில் பாஜ-பாமக கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகமாக செயல்படும் என்று அறிவித்தனர் ஆனால் அறிவித்ததோடு சரி, தேர்தல் பிரசாரம் முடியும் இந்த நாள் வரை காஞ்சிபுரம் தொகுதி பாஜ அலுவலகம் திறக்காமல் பூட்டியே கிடக்கிறது.

மாவட்ட தலைநகரான செங்கல்பட்டில் மற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான பாஜ கூட்டணி கட்சிகள் வழிகாட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த அலுவலகம் இதுவரை திறந்து கட்சி பணிகளை செய்யவில்லை. தேர்தல் பணிகளையும் செய்யவில்லை. கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை கூட தேர்தல் அலுவலகத்திற்கு அழைக்கவில்லை. பாஜவினரும் அந்த அலுவலகத்தில் கூடி கூட்டணி வேட்பாளர் ஜெயிக்க ஆலோசனை நடத்தவில்லை என பாஜவினரே புலம்புகின்றனர்.

பாஜ சார்பில் தலைமை தேர்தல் அலுவலகம் பெரிய அளவில் செயல்படும் என அறிவிக்கப்பட்டதோடு சரி. பாஜவை நம்பி பாமகவுக்கு சீட்டு கொடுக்கப்பட்டது. இப்படி இருந்தால் கூட்டணி கட்சியான பாமக எப்படி ஜெயிக்கும் என பாமகவினர் புலம்புகின்றனர். இவ்வளவு பெரிய ஆபீசை லட்ச கணக்கில் வாடகை எடுத்தும் பாஜ, பாமக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் வெயிலுக்கு கூட ஒதுங்க முடியலையே, என்று புலம்புகின்றனர்.

இது குறித்து பாஜவினர் கூறுகையில், ‘காஞ்சிபுரம் நாடாளுமன்ற சீட் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் நாங்கள் எடுத்த ஆபிசுக்கான வாடகையை எங்களிடம் கொடுத்துவிட்டு பாமகவினரை எடுத்துக்க சொன்னோம். ஆனால், பாமகவினரோ கூட்டணிக் கட்சிக்கு எதுக்கு நாங்கள் வாடகை தரனும். இலவசமா கொடுங்கனு கேட்டாங்க இதற்கு நாங்க ஒத்துக்கல. இதனால பாமகவிற்கு கொடுக்காமல் சும்மாவே பூட்டி வச்சிருக்கோம்’ என்றனர்.

Related posts

சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தாம்பரம் மாநகராட்சி 4, 5வது மண்டலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணி முடிந்ததால் நடவடிக்கை

சென்னையில் நான்காவது சம்பவம்; சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு