பாஜவில் சேரணும்… இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர்.! நெருக்கமானவர் மூலம் மிரட்டல்; டெல்லி அமைச்சர் அடிசி பகீர் தகவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் அம்மாநில முதல்வருமான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கட்சியின் 2ம் கட்ட தலைவர்களை குறிவைக்கும் ஒன்றிய அரசு தனக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி அமைச்சர் அடிசி பகீர் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி அமைச்சர் அடிசி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால், சிசோடியா அமைச்சர் சத்யேந்தர் சிங், எம்.பி சஞ்சய் சிங் ஆகிய 4 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் ஆம் ஆத்மி கட்சி சிதைந்து விடும் என பாஜ நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களுக்கு குறிவைத்துள்ளது. அடுத்ததாக என்னையும், அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், எம்எல்ஏ துர்கேஷ் பதக், மாநிலங்களவை எம்பி ராகவ் சதா ஆகியோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் மூலம் என்னை அணுகிய பாஜ, எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றவும் மேம்படுத்தவும் பாஜவில் சேருமாறும், இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் கைதாக தயாராக இருக்கும்படியும் மிரட்டியது. எனவே வரும் நாட்களில் அமலாக்கத்துறை எனது வீட்டிலும் எனது உறவினர்களிடமும் விசாரணை நடத்தலாம். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

நாங்கள் கெஜ்ரிவாலின் வீரர்கள், பகத்சிங்கின் சீடர்கள். நாட்டை காப்பற்றவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆம் ஆத்மின் கடைசி தொண்டன் வரையிலும் போராடுவான். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் மெகா கண்டன போராட்டத்தால் பாஜ திணறி உள்ளது. கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தால் பொய் வழக்குகளில் முதல்வர்களை சிறைக்கு அனுப்புவதன் மூலம் பாஜ எளிதாக எதிர்க்கட்சி அரசுகளை கலைத்துவிடும் வழக்கத்தை வாடிக்கையாக்கிவிடும். இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டெல்லி பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘‘மதுபான கொள்கை ஊழலில் அனைத்து ஆம் ஆத்மி தலைவர்களும் சம்மந்தப்பட்டுள்ளனர் ’’ என்றார்.

சிறிது நேரம் மட்டுமே தூங்கிய கெஜ்ரிவால்

இதற்கிடையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் சிறையில் தனது முதல் இரவில் தூங்கமின்றி தவித்ததாக சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர். சிறை அறைக்குள் அங்குமிங்கும் நடந்தபடி இருந்த அவர் சிறிது நேரம் மட்டுமே உறங்கியதாக தெரிவித்தனர். மேலம், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 50க்கு கீழ் இருந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மதியம் மற்றும் இரவு வீட்டில் சமைத்த உணவை சாப்பிட அனுமதி தரப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் கேட்டபடி சிறையில் அவருக்கு ராமாயணம், மகாபாரதம் மற்றும் ‘பிரதமர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்’ ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டாக சந்தித்து கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகக் கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை