பாஜ பிரமுகருக்கு கத்திக்குத்து:3 பேர் சரண்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜ பிரமுகரை கத்தியால் குத்திய 3 பேர் நெல்லை மாவாட்டம் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (73). தொழிலதிபர். பாஜ பிரமுகர். நேற்று காலை இவர் தனது வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து ராஜகோபாலை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜகோபால் கார் டிரைவர் அளித்த புகாரின் பேரில், சென்னையை சேர்ந்த வினோதினி, சென்னை அசோக்நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி (38) மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆறுமுகபாண்டி (38), திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த நவீன் (34), வெற்றிவேல் என்ற வேல் ஆகியோர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஆறுமுகபாண்டியின் சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே உள்ள இட்டமொழி ஆகும். இவர் தற்போது சென்னையில் உள்ளார்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள வினோதினிக்கும், ராஜகோபாலன் மகன் ஆனந்துக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாகவும், இந்த விரோதத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்