பிக்பாக்கெட், துரதிருஷ்டக்காரர் விமர்சனம் ராகுல்காந்தி, கார்கே மீது தேர்தல் கமிஷனில் புகார்: பா.ஜ குழு நடவடிக்கை

புதுடெல்லி: பா.ஜ பொதுச் செயலாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், மூத்த தலைவர் ஓம் பதக் ஆகியோர் அடங்கிய அக்கட்சியின் பிரதிநிதிகள் நேற்று தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி மீது புகார் அளித்தனர். குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மோடியின் ஜாதி ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டியதற்காக கார்கே மீது புகார் அளிக்கப்பட்டது. அதே போல் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்காக துரதிருஷ்டக்காரர் என்ற வார்த்தையை ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தியதற்காகவும், மேலும் ஒரு பிரதமரை பிக்பாக்கெட் என்று கூறியதற்காகவும் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு பா.ஜ பொதுச்செயலாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் கூறுகையில்,’1982ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய ஹாக்கி இறுதிப் போட்டியை இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அந்த போட்டியை காண அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கும் சென்றனர். அப்போது இந்திரா காந்திக்கு எதிராக துரதிருஷ்டக்காரர் போன்ற அவமானகரமான கருத்தை யாரும் பயன்படுத்தவில்லை ’ என்றார்.

Related posts

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை