பினாமிகளின் பெயரில் பினராயி விஜயன் வளைகுடா நாடுகளில் தொழில் நடத்துகிறார்: சொப்னா பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சொப்னா. இவர் அடிக்கடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக துணைத் தூதரின் வீட்டிலிருந்து பிரியாணி பாத்திரங்களில் மறைத்து பினராயி விஜயனின் வீட்டுக்கு தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்டன என்றும், வெளிநாடுகளுக்கு அவர் டாலர்களை கடத்தினார் என்றும் சொப்னா கூறியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு சொப்னா பேட்டியளித்தார். அதில் பினராயி விஜயனுக்கு எதிராக மீண்டும் பல குற்றச்சாட்டுகளை இவர் தெரிவித்துள்ளார்.

சொப்னா கூறியது: பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துகிறார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் அடிக்கடி அவர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான சிவசங்கர் பணியில் இருக்கும்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் தான் இது போன்ற பல போலித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கேரளாவில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமரா திட்டத்திலும் பல கோடி ஊழல் நடந்துள்ளது. விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல அதிரடி தகவல்களை நான் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி

82 வயது கார்கேவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி