அயோத்தி மருத்துவமனை திட்டம் ஒத்தி வைப்பு: வக்பு வாரியம் தகவல்

லக்னோ: உத்தரபிரதேசம் அயோத்தியில் மருத்துவமனை கட்டும் பணிகள் நிதிப்பற்றாக்குறை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் மசூதி கட்ட இடம் ஒதுக்கி தரும்படி உபி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அயோத்தியின் தன்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியது. மசூதி கட்டுமான பணிகளை நிர்வகிக்க இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை(ஐஐசிஎப்) என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஐஐசிஎப் அறக்கட்டளை உறுப்பினர்களின் ஆலோசனைப்படி புதிதாக கட்டப்படும் மசூதி வளாகத்தில் மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையம், நூலகம், சமூக சமையல்கூடம் ஆகியவை கட்டவும் முடிவெடுக்கப்பட்டது. தன்னிப்பூர் மசூதி கட்டுமான திட்டத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் கடந்த மார்ச் 4ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை கட்டும் பணிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் (ஐஐசிஎப்) செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அதர் உசேன் கூறியதாவது, “முதலில் மருத்துவமனையையும், பின்னர் மசூதியையும் கட்ட திட்டமிட்டோம். ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ” என்று தெரிவித்தார்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு