அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் வரும் 15ம் தேதி மீண்டும் ஆரம்பம்.. பணிகள் முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும் என தகவல்

லக்னோ : அயோத்தியில் திறப்பு விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமர் கோவில் பணிகள் வரும் 15ம் தேதி மீண்டும் ஆரம்பமாகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் பகுதியில் 7.2 ஏக்கர் பரப்பளவில் 3 மாடி அமைப்புகளை கொண்ட பிரம்மாண்ட ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பால ராமர் சிலைக்கு உயிரூட்டும் பிராண பிரதிஷ்ட நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருவிழா போல் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், மடாதிபதிகள், திரையுலகினர், விளையாட்டு பிரமுகர்கள் என ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு படையெடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடத்தப்பட்டதால், 3வது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று பாஜகவினர் நம்புகின்றனர். இந்த நிலையில் வசந்த காலத்தை வரவேற்கும் வசந்த் பஞ்சமி விழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படும் என ராமர் கோவிலை கட்டி வரும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாளான 15ம் தேதியன்று ராமர் கோவில் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அறக்கட்டளை உறுப்பினராக அணில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ராமர் கோவிலின் முதல் தளத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2வது மற்றும் 3வது தளத்திற்கான பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ராமர் கோவில் பணிகள் மீண்டும் தொடங்குவதை முன்னிட்டு கோவிலின் பின்புறம் ராட்ச கிரேன்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக 1 மாத விடுமுறையில் சென்ற 3,500 தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதால் அவர்களுக்கான முகாம்கள் தயாராகி வருகின்றன. ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடிவடைய 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்