வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!: உடற்கூறாய்வு அறிக்கைதான் இது தற்கொலை அல்ல; கொலை என்று நிரூபித்துக் காட்டியது..கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி..!!

சென்னை: கோகுல்ராஜ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன் தெரிவித்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு குறித்து கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோகுல்ராஜ் கொலை வழக்கில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது. இருந்த ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிய பிறகும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடினோம். உடற்கூறாய்வு அறிக்கைதான் இது தற்கொலை அல்ல; கொலை என்று நிரூபித்துக் காட்டியது.

கோகுல்ராஜ் தற்கொலை என யுவராஜ் உட்பட 10 பேர் கூறிய பொய்யான வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பின்னர் பேசிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, ஒரு பாவமும் அறியாத என் மகன், கொடூரமாக கொலை செய்யப்பட்டார். முறையான தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கும், துணை நின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் நன்றி என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related posts

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க இருப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு