உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவி, முதலுதவி பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உயிர்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவியின் செயல்பாட்டினையும், முதலுதவி பயிற்சியினையும் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, மாநகராட்சியுடன் அலெர்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட உயிர்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவியின் செயல்பாட்டினையும், முதலுதவி பயிற்சியினையும் மேயர் பிரியா இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அலெர்ட் அறக்கட்டளையானது ஒரு விபத்து போன்ற அவசரகால சூழல் அமைப்பை நோக்கி செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து பொதுமக்கள் அணுகி பயன்படுத்தும் வகையில் தானியங்கி டிஃபிபிரிலேட்டரை நிறுவியுள்ளது. உயிருக்கு ஆபத்தான சாலை விபத்து அல்லது மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இடத்தில் இந்த உயிர்காக்கும் சாதனம் நிறுவப்பட உள்ளது.

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, முதலுதவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உயிர்காக்கும் அவசரகால முதலுதவி மற்றும் சிறிஸி பயிற்சியானது சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கருவி கிடைக்க பெற்று உடனடியாக பயன்படுத்தப்பட்டால், மூச்சு, நாடி துடிப்பு, சுயநினைவில்லாமல் இருக்கும் நபரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும்.

தானியங்கி குரல் அறிவுறுத்தல்களை பின்பற்றி இதனை எளிதாக பயன்படுத்த முடியும். இந்த கருவி சர்வதேச தரநிலைகளின்படி முன்கூட்டியே அளவீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத்தலைவர் சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், அலெர்ட் அறக்கட்டளை தலைவர் முருளிதரன், இணை நிறுவனர் ராஜேஷ் திரிவேதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

வேலூரில் போலீசார் அதிரடி வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்