பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்; ஆட்டோ, பைக்குகள் உடைப்பு: ரவுடி கும்பல் 8 பேர் கைது

பெரம்பூர்: சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் ஆட்டோ, பைக்குகளை உடைத்ததுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த ரவுடி கும்பல் 8 பேரை கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் திடீர் நகர் பகுதியில் நேற்று காலை 5 மணி அளவில், ஒரு கும்பல் சாலையில் நடந்துசென்றவர்களை கத்தியால் வெட்டவந்தனர். இதனால் பயந்துபோன மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதன்பிறகு அந்த கும்பல், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள், பைக்குகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, தலைமைச் செயலக காலனி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு குடிபோதையில் நின்றிருந்த 8 பேரை கைது செய்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (எ) மொட்ட தினேஷ் (23), அஜித்குமார் (எ) வெள்ள அஜித் (22), கோபி (48), கீர்த்திவாசன் (20), சஞ்சய் (20), மஸ்தான் (20), அருண் பாலாஜி (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ள ரவுடி மாணிக்கத்தின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் திடீர் நகர் பகுதியில் உள்ள குப்பைமேடு பகுதியில் மது அருந்தியுள்ளனர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து 8 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related posts

திபெத்தில் 30 இடங்களின் பெயர்களை மாற்றுகிறது இந்தியா: எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு நெருக்கடி தர முடிவு?

விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு

வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்