சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது

திருத்தணி: சிறுமியை காதலித்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 17 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருத்தணி அருகே விகேஎன் கண்டிகை அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் மகளான 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில், ஆசை வார்த்தைகள் கூறி கடந்த மாதம் 20ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்துகொண்டு, திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் உள்ள உறவினர் வீட்டில் இருவரும் சில நாட்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், எனது மகள் காணவில்லை என்று திருத்தணி காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் பணம் தட்டுப்பாடு ஏற்படவே திருமணம் செய்துகொண்ட இருவரும் வீட்டிற்குச் சென்று விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சிறுமியை பேருந்தில் அவரது வீட்டிற்கு அச்சிறுவன் அனுப்பிவைத்தான்.

மறுநாள் சிறுமியை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்த பெற்றோர் அழைத்துச் சென்றதை தெரிந்து கொண்டு, தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று பயந்த சிறுவன், சித்தூருக்குச் செல்வதற்காக நேற்று காலை திருத்தணி பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்தபோது சிறுவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதில், சிறுமியை பலாத்காரம் செய்து, கட்டாய திருமணம் செய்துகொண்ட குற்றத்திற்காக சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

Related posts

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்: கடலூரில் பயங்கரம்

கன்னியாகுமரி அருகே தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து கண் எரிச்சல்: வாகன ஓட்டிகள் அவதி