இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டது. அதில், கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 35 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஜிஎஸ்டி ரூ.38 ஆயிரத்து 440 கோடியும், மத்திய ஜிஎஸ்டி ரூ.47 ஆயிரத்து 412 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.89 ஆயிரத்து 158 கோடியும் வசூலாகி உள்ளது. செஸ் வரி ரூ.12,025 கோடி என நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் வசூலான ரூ.1.68 லட்சம் கோடியே அதிகபட்ச வசூலாக இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு 12 சதவீதம் கூடுதலாக வரி வசூலாகி உள்ளது. இதுதவிர, கடந்த 2022-23ம் நிதியாண்டின் மொத்த வசூல் ரூ.18.10 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 22 சதவீதம் அதிகம்.

* பிரதமர் மோடி மகிழ்ச்சி
கடந்த 2022 ஏப்ரலில் வசூலான ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடியை விட கடந்த மாதம் ரூ.19,495 கோடி அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகி இருப்பது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘இந்திய பொருளாதாரத்திற்கு இது ஒரு சிறந்த செய்தி. குறைந்த வரி விகிதங்கள் இருந்தபோதிலும் வரி வசூல் அதிகரித்து வருவது, ஜிஎஸ்டியின் வெற்றியைக் காட்டுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை

அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!