பதிவாளர் நியமனத்தை எதிர்த்த வழக்கு அண்ணா பல்கலை. பதில் தர நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பரந்தாமன் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர் பதவியை நிரப்புவது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பதிவாளராக டாக்டர் பிரகாஷ் என்பவரை நியமிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் கருத்துருவை முன் வைத்தார். இதற்கு சிண்டிகேட் எதிர்ப்பு தெரிவித்ததுடன் காலியிடம் குறித்து விரிவான விளம்பரம் அளித்து அதன் பிறகு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், சிண்டிகேட்டின் அடுத்த கூட்டத்தில் பிரகாஷை பதிவாளராக நியமிப்பது தொடர்பான கருத்துருவை துணைவேந்தர் மீண்டும் கொண்டு வந்தவுடன் அவரை நியமித்தும் உத்தரவிட்டார்.

சிண்டிகேட்டின் 13 உறுப்பினர்களில் 9 பேர் பிரகாஷை பதிவாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் திருத்தம் செய்து 6 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி பிரகாஷ் நியமிக்கப்பட்டது பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது. எனவே, அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பாதுகாக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், இரு சிண்டிகேட் கூட்டத்தின் வீடியோக்களை பத்திரப்படுத்தும்படி பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு