சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பிறகு, கைது நடவடிக்ககைளை எடுக்க அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்தது. அதன்படி, பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19ன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. அமலாக்கத்துறைக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்று விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளை நேற்று அதிரடியாக விதித்தது.

அதன் விவரம்:
சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு கடந்த மாதம் 30ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு:
ஜாமீன் பெறுவதற்கு சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் பிரிவு 45ன் இரட்டை நிபந்தனைகள் பொருந்தாது. இதில் சம்மனைப் பின்பற்றி நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் ஆராய்ந்து அது விசாரணைக்கு உகந்தது என்று எடுத்து கொண்ட பிறகு பிரிவு 19ன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளியை அமலாக்கத் துறை கைது செய்ய முடியாது. எனவே தான் சட்ட விதி 45ன் இரட்டை நிபந்தனைகள் பொருந்தாது என்பது மட்டுமில்லாமல் தேவையில்லாத ஒன்றாகும். இதில் ஒருவேளை குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை காவலில் வைக்க விரும்பினால் அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த ஒரு அதிகாரத்தையும் அமலாக்கத்துறை மேற்கொள்ள முடியாது.

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் விதி 44 (1) (பி)யின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகார் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே கைது செய்யப்படாமல் இருந்தால், விசாரணைக்கு தான் அவர் வரவழைக்கப்படுவாரே தவிர அது கைது நடவடிக்கையாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அதனை செய்திருப்பதற்கான வாய்ப்பில்லை என்றும், ஜாமீனில் வெளி வந்தால் அவர் மேலும் குற்றங்களை செய்ய மாட்டார் என்றும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே சிறப்பு விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

ஆனால் ஒருவர் நீதிமன்றத்தின் சம்மன்களுக்கு ஆஜராகி இருந்தால் சட்ட விதி 45ன் இரட்டை நிபந்தனைகளை கருத்தில் கொள்ள தேவையில்லை. மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதுவும் இல்லாமல், அமலாக்கத்துறை யாரையும் கைது செய்யக் கூடாது. அதேபோன்று சம்மன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தால், அவர் காவலில் இருப்பதாக கருத முடியாது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 88வது பிரிவின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதற்கான அறிக்கைகளை வழங்க சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தலாம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு