எனது 11 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!இடைக்கால பட்ஜெட் குறித்து கார்கே காட்டம்

புதுடெல்லி: இடைக்கால பட்ஜெட் குறித்து மோடி அரசுக்கு 11 கேள்விகளை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மோடி அரசுக்கு 11 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அதன்படி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பாதுகாப்பான வீடு, 100 ஸ்மார்ட் சிட்டி இவற்றில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது? இன்னும் பாக்கி எத்தனை உள்ளது? 2014ல் 4.6 சதவீதமாக இருந்த விவசாய வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 1.8 சதவீதமாக உள்ளது. தினமும் 31 விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்?

2014ல் 4.55 சதவீதமாக இருந்த கல்வித்துறை வளர்ச்சி, தற்போது 3.2 சதவீதமாக சரிந்தது எப்படி? பட்டியல் சாதியினர், ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் நலத்திட்ட ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான மொத்த ஒதுக்கீடு இந்த ஆண்டு குறைக்கப்பட்டது ஏன்? 20 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களிடையே வேலையின்மை விகிதம் 45.5 சதவீதமாக உள்ளது. மூன்று கோடி மக்களின் வேலைகளை ஒன்றிய அரசு பறித்தது ஏன்? குடும்ப சேமிப்பு விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது ஏன்? அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% முதல் 18% வரை ஜிஎஸ்டி உயர்வு ஏன்?

சாமானியரின் வருமானம் உயர்கிறது என்று நிதி அமைச்சர் பொய் சொல்வது ஏன்? புலம்பெயர்ந்தோரின் ஊதியம் ஐந்தாண்டுகளில் குறைந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் நாட்கள் 100லிருந்து 48 ஆக குறைக்கப்பட்டது ஏன்? 2005ல் 30 சதவீதமாக இருந்த பெண்களின் வேலைவாய்ப்புப் பிரதிநிதித்துவம் இப்போது 24 சதவீதமாக குறைந்தது ஏன்? சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் எட்டு சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாக எப்படி குறைந்தது? எனவே இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Related posts

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் அதிகாரியான மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீஸ் அகாடமியில் நெகிழ்ச்சி