குற்ற பின்னணியில் உள்ளவர்களை கட்சியில் சேர்க்கும் புரோக்கர் வேலையை செய்கிறார் அண்ணாமலை

1 திமுகவுக்கு திடீரென ஆதரவு கொடுத்தது ஏன்?
இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். உலகத்தில் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, பன்முகத் தன்மை கொண்ட இந்தியா, வேற்றுமையிலும் ஒற்றுமை கொண்ட இந்தியா. இது தான் உலக அரங்கில் இந்தியாவுக்கு இருக்கக் கூடிய தனிசிறப்பு. அது கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சியில் சிதைக்கப்படுகிறது.

மக்கள் மத ரீதியாக பிளவுபடுத்தப்படுகிறார்கள். பொது துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உப்புமா, ஒரே வடை, ஒரே ஊறுகாய் என்கிற மாதிரி பாஜ அரசு போகிறது. இது நாட்டுக்கு ஏற்புடையதல்ல. எனவே திமுகவுக்கு ஆதரவு என்பது தேச நலன் கருதி நாங்கள் எடுத்த முடிவு.

2 40 தொகுதிகளிலும் உங்களது பிரசாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இது. நாட்டின் இயற்கை வளங்களை எல்லாம் நமது முன்னோர்கள் காப்பாற்றி, அதை வருங்கால தலைமுறைகளுக்கு வளர்த்து கொடுக்க வேண்டும் என்று தான் நம்மிடம் விட்டு சென்றுள்ளனர். ஆனால் இப்போது இருக்கிற நிலைமையை பார்த்தால் ஒன்றிய பாஜ அரசு கார்பரேட் கம்பெனிகளிடம் வித்துட்டு போயிருவாங்க என்பதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான அரசு என்று சொல்லிவிட்டு லஞ்சங்களை எப்படி விஞ்ஞான முறையிலும், சட்ட ரீதியாகவும் எப்படி பெறுவது என்பதை கற்றுக் கொடுத்த அரசாக ஒன்றிய பாஜ அரசு மாறி உள்ளது. அதனால் தான், கடைசியாக பாஜ சிக்கிய தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வரை நான் மக்கள் மத்தியில் எடுத்து சொல்லியே தீருவேன்.

3 தமிழக அரசியலில் அண்ணாமலை நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
மோடி எப்படியோ அவரை மாதிரி தான் அவரது கட்சியில் இருப்பவர்களும் இருப்பார்கள். அதே மாதிரி தான் அண்ணாமலை என்பவர் 20 ஆயிரம் புழுகு புத்தகங்களை படித்திருக்கிறேன் என்கிறார். அப்படி புழுகு புத்தகங்களை படித்தவர் ஒரு பொய்யராக தான் இருக்க முடியும். அவர் பேசுவதை ஒரு பொருட்டாக எடுக்க கூடாது. பாமரர்கள் எளியவர்களாக இருந்தாலும் கூட அவர்களிடம் உண்மை நேர்மை இருக்கும்.

ஆனால் இன்றைக்கு படித்தவர்கள் தான் கிரிமினல்களாக இருக்கிறார்கள். படித்து உயர் பதவியில் இருந்த ஆர்.என்.ரவி தான் இன்று தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார். ஒரு ஆளுநர் பதவிக்கு தகுந்தவாறு அவர் நடக்கவில்லை. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை, தான் தலைவராக இருக்கக்கூடிய கட்சியில், குற்ற பின்னணியில் உள்ளவர்களை கட்சியில் சேர்க்கும் புரோக்கர் வேலையை செய்து வருவதை என்ன சொல்வீர்கள்?. இவர் தான் அடுத்த தலைைமுறையை வழிநடத்தக்கூடிய தலைவரா?

4 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை அடிமை ஆட்சி என்று ஏன் அடிக்கடி கூறுகிறீர்கள்?
பாஜவுக்கு அடிமைகளாகவே கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தது உலகம் அறிந்த உண்மை. குடியுரிமை திருத்த சட்ட மசோதா முதற்கொண்டு ஆதரவாக கையெழுத்து போட்டது அதிமுக, பாமக தான். அன்று முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் தமிழ்நாட்டின் எத்தனையோ உரிமைகளை விட்டு கொடுத்து விட்டார்கள்.

அதற்கு காரணம், இவர்கள் செய்த ஊழல்களை, தவறுகளை, இவர்கள் சிறைச்சாலைக்கு செல்லாமல் இருப்பதற்காக தன்னையும், பதவிகளையும் காப்பாற்றிக் கொள்ள வருடிகளாக பாஜவின் பாதங்களை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது உலகமே அறிந்தது. அவர்களை அடிமை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?

Related posts

அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம்!

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.! பிரமாணப்பத்திரத்தில் தகவல்