ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசிய வழக்கில் 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 3 தினங்களுக்கு முன்பு விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபரால் கல் வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜெகன் மோகன் நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக, ஜெகன் மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஜெகன் மோகனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. ஒருவரும் காயமடைந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார், கல் வீசிய மர்ம நபரை பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாத நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர போலீஸ் அறிவித்தது. தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜயவாடா அருகே உள்ள சிங் நகர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். தரையில் பதிக்க பயன்படுத்தப்படும் டைல்ஸ் துண்டை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது வீசியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. கைதான சதீஷ் குமார் மற்றும் ஆகாஷ், துர்கா ராவ் , சின்னா, சந்தோஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல் வீசியவர்களை 3 நாட்களுக்கு பின் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்திருந்த நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!!

போலீஸ் தாக்கி இளைஞர் பலி: அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு