ஆந்திராவில் கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை செம்மர கடத்தல் குற்றவாளி விழுப்புரம் கோர்ட்டில் சரண்

விழுப்புரம்: திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த 5ம்தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் செம்மரம் கடத்தி வந்தவர்கள் காரை போலீசார் மீது ஏற்றிவிட்டு தப்பிசென்றனர். இதில் சிறப்பு அதிரடிப்படை காவலர் கணேஷ்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில் இருவரை பிடித்த போலீசார் காரில் இருந்து 7 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அம்மாநில போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிப்பதற்காக ஆந்திர மாநில போலீசார் கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் முகாமிட்டு அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கல்வராயன்மலை இன்னாடு ஊராட்சி நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன்(31) என்பவர் நேற்று விழுப்புரம் 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அகிலா முன்னிலையில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து 15 நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்