அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: தமிழக டிஜிபி நேரில் ஆஜராக தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன்..!!

டெல்லி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக டிஜிபி நேரில் ஆஜராக தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை அப்போதைய ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் கொல்கத்தாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆஷிஷ் என்பவர் வழக்கு ஒன்றினை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை எடுத்துக்கொண்ட மனித உரிமை ஆணையம், 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு கடந்த ஏப்ரல் 27ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

டிஜிபி எடுத்த நடவடிக்கை தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுவரை டிஜிபியிடம் இருந்து எந்தவொரு அறிக்கையும் வரவில்லை என்ற காரணம் காட்டி, மார்ச் 1ம் தேதி 11 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1ம் தேதி சம்பவம் தொடர்பான அறிக்கையும் கொண்டுவந்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக 4 முறை நினைவூட்டல் வழங்கப்பட்டும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரத்தை கடுமையாக பார்த்து இந்த உத்தரவு பிறப்பித்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி 23ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு