வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு அரசு தரப்பில் அப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலங்களை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2013ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதில் உடந்தையாக செயல்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட மொத்தம் ஏழு பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சேட் கடந்த 2021ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மேற்கண்ட விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.பெரியசாமி, பர்வீன், கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்காசங்கர் ஆகிய நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பர்வீன் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பர்வீன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர்,\\” இந்த வழக்கு என்பது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்டதாகும். மேலும் குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதரங்களும் இல்லாமல் அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”வீட்டு மனை ஒதுக்கீடு விவகாரத்தில் பர்வீன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை, விசாரணை நீதிமன்றம் நடத்தி முடிக்க வேண்டும் என்று முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடை விதிக்கப்படுகிறது” என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு