இலைக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த கூட்டணி கட்சிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வெயிலூர்ல இலைக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தனவாமே கூட்டணிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் எம்பி தொகுதியில இலைக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்துச்சு. இந்த கூட்டத்துக்கு வீரமான மாஜி அமைச்சரும், வேட்பாளரும் 2 மணிநேரம் தாமதமா வந்தாங்களாம். இதுனால காத்திருந்தவங்க அதிருப்தி அடைந்தாங்க. கூட்டம் தொடங்குனதும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பேச அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போதான் 2 கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிங்க யாரும் கூட்டத்துக்கு வரலன்னு தெரிஞ்சுச்சு. வந்திருந்த கூட்டணி நிர்வாகிங்களுக்கும் 2 நிமிஷம் தான் பேச அனுமதின்னு சொல்லிட்டாங்களாம். ஆனா இலைக்கட்சி நிர்வாகிங்களுக்கு குறிப்பிட்ட நேரம்தான் பேசனும்னு எந்தவித கட்டுப்பாடும் இல்லையாம். இதனால வெயிலூர் எம்பி தொகுதியில இலைக்கட்சிக்கும், கூட்டணிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம். இதன் பிரதிபலிப்பு தேர்தல்ல நிச்சயம் இருக்கும்னு இலைக்கட்சியை சேர்ந்தவங்களே பேசிக்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேட்பாளர் பட்டியலில் இருந்து தப்பித்த எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள் நிம்மதி பெருமூச்சு விடுறாங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘புதுவை மாநிலத்தில், ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி என்றாலும் பாஜ வேட்பாளர் தேர்வு நீண்ட தாமதம் ஆகிவிட்டது. மூன்று மாதத்துக்கு முன்பே தனது கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரசை கேட்காமலேயே தொகுதி பாஜவுக்கு என முடிவு செய்து தொகுதி முழுவதும் சுவர் விளம்பரம் உள்பட பிரசாரத்தை துவக்கி விட்டனர்.

இதனால் அப்செட்டான புல்லட்சாமியை கடைசி நேரத்தில் பாஜ மேலிடம் சமாதானம் செய்துவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாகவே வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள் என பல பெயர்கள் வலம் வந்தது. கடைசியாக யாரும் முன்வராததால் தற்போது ராஜ்ய சபா எம்பியும் மாநில தலைவருமான கணபதி பெயர் கொண்டவரின் பெயரும் அடிபட்டது.
இறுதியாக நேற்று முன்தினம் பாஜ வேட்பாளராக மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளரா? வேண்டாம் என பாஜ தலைமையிடம் கூறி வந்தாலும் அவரையே வேட்பாளராக அறிவித்ததால் தற்போது தீவிரமாக களப்பணியில் இறங்கிவிட்டார். இதனால் பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் நல்ல வேளை நாம் தப்பித்தோம், என நிம்மதி பெருமூச்சு விட்டனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சைக்கிளை தாமரை கண்டுக்கிறதே இல்லையாமே..’’ ‘‘தாமரை கட்சி கூட்டணியில் சைக்கிள் கட்சி நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இல்லாத காலக்கட்டங்களிலும் ஒன்றிய அரசை பெரிய அளவில் அக்கட்சியின் தலைமையோ, நிர்வாகிகளோ விமர்சிக்க மாட்டார்கள். தூங்கா நகரை பொறுத்தவரை சைக்கிள் கட்சியில் மாஜி எம்எல்ஏ உட்பட கணிசமான நிர்வாகிகள் பலர் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் தாமரை கட்சியினரை விட சற்று அதிகம் என்று கூட கூறலாம். ஆனாலும், இக்கட்சியினரை பொதுக்கூட்டம் உட்பட எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், தாமரை கட்சி நிர்வாகிகள் அழைப்பதே இல்லை.

சைக்கிள் கட்சி தலைவரை, தேசிய, மாநில தாமரை தலைவர்கள் மரியாதையாக நடத்தினாலும், தூங்கா நகர் உட்பட மற்ற மாவட்டங்களில் சைக்கிள் கட்சியினரை தாமரை தரப்பினர் யாரும் கண்டுகொள்வதே இல்லை என்ற குறை பொதுவாகவே உள்ளது. சரி.. தேர்தல் தொடங்கப் போகுது. வேட்பாளர்களையும் அறிவிச்சாச்சு… தாமரை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை அல்லது வேட்பாளர் அறிமுக கூட்டம் எதற்காவது அழைப்பார்கள்.

தேர்தல் வேலைகள் தொடர்பாக பேசுவார்கள் என காத்திருக்கின்றனராம். ஆனால், தாமரை கட்சியில் வேட்பாளரை அறிவித்த பிறகும் கூட சைக்கிள் தரப்பை யாரும் தேடவில்லையாம். இதனால் கூட்டணியில் இருந்தும், இப்படி தாமரை நிர்வாகிகள் பாராமுகமாக இருக்கின்றனரென தலைமையிடம் பேசியுள்ளனர். அதற்கு தலைமையோ, ‘அழைத்தால் போங்க… இல்லாட்டி நிம்மதி விடுங்க…’ என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் அல்வா தொகுதியின் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளாரே….’’

‘‘இலை கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் சரியாக கூட்டணி அமையாத நிலையில், உள்ளூர் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டினர். ஒரு சில வேட்பாளர்களுக்கு ‘இனிப்பாக’ சீட் தருகிறேன் ‘ராஜா’ என்று தலைமை அணுகிய போதும், என்னிடம் செலவு செய்ய தொகை இல்லை என ‘ஜகா’ வாங்கி விட்டனர். இதனால் ஜெயலலிதா பாணியில் அதிரடியாக, சமீபத்தில் கட்சியில் இணைந்த சென்னை புதுமுகத்தை களம் இறக்கி விட்டாராம் சேலம் காரர். ஆனால் இந்த புதுமுகம் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவராச்சே….

என சேலம் காரருக்கு உறைக்காமல் போனது. இதனால் தென்மாவட்ட இலை கட்சியினர் கொதித்துப் போயினர். மம்மி இருந்தால் இதெல்லாம் நடக்குமா…. முக்கியமான அல்வா தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் கிடைக்கவில்லையா என தொண்டர்களும் இலை கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இலை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு தென்மாவட்டங்களில் இருந்து சென்ற அதிமுக சீனியர் பலரும் இந்த விஷயத்தை சேலம் காரருக்கு எடுத்துச் சென்றார்களாம். அதற்கு பின்னரே வேட்பாளர் மாற்றம் என அறிவிப்பு வெளியிட்டாராம் சேலம் காரர்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை!

மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு