அதிமுகவில் வேட்பாளர் அறிவித்த அன்றே ஆரம்பம்.! ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு நெல்லை தொகுதியா: வேட்பாளருக்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

சென்னை: ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் நேற்றும், இன்றும் அறிவிக்கப்பட்டது. இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் நெல்லை தொகுதிக்கு சென்னையைச் சேர்ந்த வக்கீல் சிம்லா முத்துச்சோழனை அறிவித்துள்ளது. இவருக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து நெல்லை தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, 2016ம் ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அப்படி ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அவரைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்த சிம்லாவை, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, அழைத்து வந்து கட்சியில் சேர்த்துள்ளார். கட்சியில் சேர்ந்து ஒரு வாரத்துக்குள் அவரை வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது. நெல்லை தொகுதி கேட்டு 79 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், மகளிர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல பொறுப்புகளில் இருந்தவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். ஆனால் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, கட்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டி விட்டு இன்று நெல்லைக்கே சம்பந்தம் இல்லாத சென்னையைச் சேர்ந்தவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையா சொன்னதற்காக கட்சியை அடகு வைப்பதா?.

அவர் முன்னாள் அமைச்சரின் மருமகள். மேலும் நெல்லையைப் பொறுத்தவரை கிறிஸ்தவ அல்லது இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்தவருக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுக்களை பெற முடியும். ஆனால், சிம்லாவின் மாமியார்தான் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். சிம்லா வேறு வகுப்பைச் சேர்ந்தவர். அவரை எப்படி நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்க முடியும். மேலும், இசக்கி சுப்பையா, நயினார் நாகேந்திரனுடன் சேர்ந்து கொண்டு, அவருக்கு அதிக ஓட்டுக்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளனர். நயினார், இசக்கி சுப்பையாவின் கூட்டுச் சதியை அதிமுக நிர்வாகிகள் உடைத்தெறிவார்கள். இதனால் வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், படுதோல்வி அடைவது உறுதி என்று தெரிவிக்கின்றனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு