விவசாயிகளை வளர்க்கும்… விவசாயத்தையும் வளர்க்கும்… வேளாண் சுற்றுலா!

விதைத்தோம்… அறுவடை செய்து விற்பனை செய்தோம்… என்பதுதான் காலம் காலமாக விவசாயிகள் பின்பற்றி வந்த நடைமுறை. ஆனால் இப்போது விவசாயத் தொழிலில் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய முறைகளில் சாகுபடி, எளிமையான பராமரிப்பு என பயிர்த்தொழிலில் பல புதுமைகள் புகுந்திருக்கின்றன. விளைச்சலை அறுவடை செய்து நேரடி விற்பனை, மதிப்புக்கூட்டி விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என கூடுதல் வருமானத்திற்கான வழிகளையும் கண்டுபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயத் தொழிலோடு, வேளாண் சுற்றுலா திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார் மதுரை மாத்தூர் செட்டிக்குளத்தைச் சேர்ந்த அருள் ஜேம்ஸ். பொறியாளரான இவர் விவசாயத்தில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தனது தோட்டத்தைப் பார்க்க வரும் மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் மாதிரி வேளாண் சுற்றுலா திட்டத்தின் மூலம் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதன்மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார். விவசாயிகள் தங்களுடைய வருமானத்தை அதிகப்படுத்த பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருந்தால் போதாது. தங்களுடைய பண்ணையை வேளாண் சுற்றுலாத் தலமாகவும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தும் அருள் ஜேம்ஸை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.

“இயந்திரமயமான நகர வாழ்க்கை, பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மன அழுத்தம்னு இப்போ இருக்குற தலைமுறை கடுமையா பாதிக்கப்படுது. இந்தக் காரணங்களால பாதிக்கப்படும் பல பேர், ஓரிரு நாட்களாவது இதுல இருந்து விலகி, இயற்கையான அமைதியான சூழல்ல புத்துணர்ச்சி பெறணும்னு விரும்புறாங்க. குறிப்பா, கிராமம் சார்ந்த வாழ்க்கையைச் சில மணி நேரங்களாவது அனுபவிச்சு பார்க்கணும்ங்கற ஆர்வமும் ஆசையும் இப்ப நகர மக்கள் கிட்ட அதிகமாகிட்டு வருது. மேலும் விவசாயம் தொடர்பான அடிப்படை விஷயங்களை, நிலத்துல இறங்கி நேரடியா தெரிஞ்சுக்கணுங்கற ஆர்வம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில அதிகமாகிட்டு இருக்கு. ஆசிரியர்களும் இதுல ஆர்வம் காட்டுறாங்க. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்கள்ல இருந்து வரக்கூடிய பொதுவான சுற்றுலாப் பயணிகள் கோயில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பார்க்குறதோடு மட்டுமல்லாம, அந்தந்தப் பகுதிகளில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைகள்ல தங்கி விவசாயப் பணிகளை நேரடியா பார்க்க விரும்புறாங்க. தங்கும் விடுதிகளில் தங்குறதை முடிஞ்ச வரைக்கும் தவிர்க்க நினைக்குறாங்க. இதுபோல் இருக்கும் சூழ்நிலையில் வேளாண் சுற்றுலா தலங்களுக்கான வாய்ப்புகளும், தேவைகளும் பல வகைகளில் விரிவடைஞ்சுக்கிட்டே இருக்கு. விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு கருவியாகவும் வேளாண் சுற்றுலா இருக்கு. எனது மூன்றரை ஏக்கர் நிலத்தில் மா, தென்னை, கொய்யா, எலுமிச்சை மரக்கன்றுகளைச் சாகுபடி செஞ்சிருக்கேன். அனைத்தும் இப்போ பலன் தந்துகிட்டு இருக்கு.

பண்ணைக் குட்டை அமைச்சி மீன் வளர்க்குறேன். மீன் வளர்ப்பைப் பார்வையிட வருபவர்கள் அங்கேயே குளிக்க வசதியாகவும் குளத்தை மாத்தி இருக்கேன். ஆடு, மாடு, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி உட்பட கால்நடைகளையும் வளர்த்துட்டு வரேன். இயற்கை முறையில் மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்துவதால் இதுங்களோட இறைச்சி சுவையாகவும், சத்தான உணவாகவும் பயன்படுத்தப்படுது. இங்கே சோலார் அமைப்பு மூலமா நீர்ப் பாய்ச்சும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திட்டு வரேன். இந்த மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை மாதிரிப் பண்ணையாக மாற்றி, இதுபோல மற்ற விவசாயிகளையும் ஈடுபடுத்தும் நோக்கத்தில் மாதிரி வேளாண் சுற்றுலா திட்டத்தை உருவாக்கி இருக்கேன். இதை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களோட பண்ணையை வேளாண் சுற்றுலாத் தலமாக உருவாக்கி வருமானம் ஈட்டலாம். உலகின் பல நாடுகளில் இந்த வேளாண் சுற்றுலாத் திட்டம் சிறப்பா செயல்படுத்தப்பட்டு வளர்ச்சி அடைஞ்சுக்கிட்டு இருக்கு. இதில் இத்தாலி நாட்டு விவசாயிகள்தான், உலகுக்கே முன்னோடியா இருக்காங்க. அங்குள்ள பெரும்பாலான விவசாயப் பண்ணைகள், வேளாண் சுற்றுலாத் தலங்களா செயல்பட்டுக்கிட்டு இருக்கு. 1960ல் இத்தாலியில் வேளாண் சுற்றுலா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதை மேலும் ஊக்கப்படுத்த, இத்தாலி நாட்டு அரசு 1985ம் ஆண்டு வேளாண் சுற்றுலாத் திட்டத்தை, அரசாங்க கொள்கைத் திட்டமாகவே உருவாக்கிச் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதனால் அந்த நாட்டுல உள்ள பெரும்பாலான விவசாயப் பண்ணைகள், வேளாண் சுற்றுலாத் தலமாகச் செயல்படுத்தப்படுது.

இத்தாலி நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். அந்த நாட்டுல உள்ள வேளாண் சுற்றுலாத் தலங்களோட மொத்தப் பரப்பு 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர். வேளாண் விளைபொருட்கள் உற்பத்தி மூலம் கிடைக்குற வருமானத்தை விடவும், வேளாண் சுற்றுலா மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டலாம். இந்தியாவுல 75 சதவீதம் மக்கள் விவசாயத்தையும் விவசாயத்தைச் சார்ந்த தொழிலையும் நம்பி இருக்காங்க. ஆனால் விவசாயிகளோட பொருளாதார நிலை போதுமான அளவுக்கு வளர்ச்சி அடையல. மேலும் குறைந்தது 100 முதல் 200 விவசாயிகள் அல்லது தொழில் முனைவோர்கள் இணைந்து 100 ஏக்கர் நிலத்தை இதுபோல ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் கிராமமாக மாற்றத் திட்டமிட்டு இருக்கேன். பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர்களைச் சாகுபடி செய்வது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து என எதுக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்தாம முழுக்க முழுக்க இயற்கை முறையில் பராமரிப்பது என செயல்பட திட்டம் வச்சிருக்கேன். வெளிநாடுகளில் இதுபோன்ற திட்டம் நடைமுறையில் இருக்கு. முதல்கட்டமா மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகள்ல 20 ஏக்கர் நிலத்துல விவசாய சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செஞ்சிருக்கோம். சுற்றுலாப் பயணிகள் விவசாயத் தோட்டத்தில் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் இங்கு வந்து பார்வையிடும்போது அவங்களுக்கு நல்ல அனுபவமாக இருப்பதோடு, நல்ல பாடமாகவும் இருக்கும். இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும். நீர்ப் பாய்ச்சுவது, களை எடுப்பது, விதை நடுவது போன்ற பணிகளை சுற்றுலா பயணிகளுக்கு கற்றுத் தருகிறோம். இங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதோடு, அவங்களுக்கு அந்தக் காய்கறிகளைக் கொண்டே ருசியா சமைச்சி பரிமாறுவோம். இந்த நேரடி சந்தைப்படுத்தும் வாய்ப்பின் மூலம் விவசாயிகள் வியாபாரிகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மக்களும் தோட்டத்திற்குச் சென்று காய்கறிகளை வாங்கும்போது விவசாயிகளுக்கு இடைத்தரகர் கமிஷன் இல்லாம கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்’’ என மிக மிக பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புக்கு:
அருள் ஜேம்ஸ்: 98946 10778.

 

Related posts

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி