அதானியை காப்பாற்ற நினைக்கும் மோடிக்கு ஊழல் குறித்து பேச உரிமை கிடையாது: முத்தரசன் கடும் தாக்கு

சிவகங்கை: ‘அதானியை காப்பாற்ற நினைக்கும் பிரதமர் மோடிக்கு ஊழல் குறித்து பேச உரிமை கிடையாது’ என முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நேற்று அளித்த பேட்டி: விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதலுக்கு உத்தரவாத சட்டமாக ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்கள் விவசாயிகள் போராட்டத்தையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்போது ஒன்றிய அரசு அளித்த எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

சமூக நீதி மூலம் கிடைக்கும் பயன்களை பறிப்பது, சமூக நீதியை பாதிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. சமூக நீதி காக்கப்பட வேண்டும் என மாநாட்டை நடத்தி அதில் தமிழ்நாடு முதல்வர், மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசியது வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். லஞ்சம், முறைகேடுகள், மோசடிகளுக்கு பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்.

அதானியை காப்பாற்ற மோடி ஏன் இவ்வளவு பாடுபடுகிறார்? அதானியின் ஏஜென்டாக இருக்கிறார். எனவே ஊழல் குறித்து பேச மோடிக்கு உரிமை கிடையாது. ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நடவடிக்கை, வீட்டை காலி செய்யும் நடவடிக்கை ஆகியவை முழுமையாக பழிவாங்கும் செயல். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்னை மட்டும் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை. நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்கலாம் என மோடி செயல்பட்டால், மக்கள் மோடியை பழி வாங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!