நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம்; பீகார் வாலிபரிடம் கிடுக்கிப்பிடியாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை

புதுடெல்லி: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக பீகார் வாலிபரிடம் கிடுக்கிப்பிடியாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இவரது உருவப்படம் “மார்பிங்’ செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த ஆபாசமான போலி வீடியோ பரப்பப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது. டெல்லி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு போலீசாரும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு டெல்லி காவல் துறை அண்மையில் கடிதம் எழுதியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 19 வயது வாலிபரிடம் போலீசார் விசாரணையை நடத்தினர்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது:
இந்த வீடியோவை அந்த வாலிபர், தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்டதால் விசாரணையில் சேர அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயரை கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் உளவு துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகளின் கீழ் கடந்த 10ம் தேதி டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு எப்ஐஆர் பதிவு செய்தது. இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்ஸ்டாகிராமில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ததாக கூறினாலும் பீகாரை சேர்ந்த அந்த வாலிபரிடம் விசாரித்து வருகிறோம். அந்த வாலிபர், காவல் துறையின் சிறப்பு பிரிவு முன் ஆஜரானார். அவர் பதிவேற்ற பயன்படுத்தியதாக கூறப்படும் அவரது கைப்பேசியை கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்