கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே ரூ65.09 கோடியில் 4 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்:35 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்


கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே ரூ65.09 கோடி மதிப்பீட்டில் 4 இடங்களில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 35 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றின் கரையோர கிராமங்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதி கலசப்பாக்கம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. கிராம ஊராட்சியை தலைமை இடமாகக் கொண்டு முழுவதும் கிராமங்களை உள்ளடக்கிய கலசப்பாக்கம் தொகுதி பரப்பளவில் மிகப்பெரியது. அதில் கலசப்பாக்கம், புதுப்பாளையம், போளூர், ஜவ்வாது மலை ஒன்றியங்களைச் சேர்ந்த 94 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போது அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி செய்யாற்றின் குறுக்கே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உயர்மட்ட பாலங்கள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், தொடர்ந்து எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ சரவணன் ஆகியோர் தொகுதி மக்கள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே 4 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க ரூ65.09 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூண்டி மற்றும் பழங்கோயில் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க ரூ19.92 கோடி மதிப்பீட்டிலும், கீழ் பொத்தரை மற்றும் பூவாம்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ20.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், கீழ் தாமரைப்பாக்கம் மற்றும் தென் மகாதேவமங்கலம், கோயில் மாதிமங்கலம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ16.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காலூர், குருவிமலை கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ9.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்யாற்றின் குறுக்கே 4 இடங்களில் ரூ65.09 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செய்யாற்றின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் 35 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். பூண்டி மற்றும் பழங்கோயில் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைத்திட தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்வதற்காக 2600 டன் மணல் மூட்டைகள் அடுக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகு அடுத்த கட்டப் பணிகள் தொடங்க உள்ளன

Related posts

தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போலி நகைகள் பறிமுதல்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!