சென்னையில் சேகரிக்கப்பட்ட 87,420 கிலோ சானிட்டரி நாப்கின் விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 87,420 கிலோ சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் எரியூட்டு நிலையங்களில் விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் உருவாகும் குப்பையினை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோகக் குப்பை என வகைப்பிரித்து தூய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது.

மேலும், சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளையும் தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கழிவுகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வீட்டிலும் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மக்கும் உறையில் போட்டு, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை மண்டல வாரியாக கடந்த 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை 87,420 கிலோ சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டது.

இதில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 9,410 கிலோ, அடையாறு மண்டலத்தில் 9,240 கிலோ மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 8,750 கிலோ அளவில் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல: ஜி.வி.பிரகாஷ் அறிக்கை!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு