7 கட்ட தேர்தல் திருவிழா தொடக்கம் 102 மக்களவை, 92 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

* நாடு முழுவதும் 16.63 கோடி பேர் ஜனநாயக கடமையாற்ற உள்ளனர்

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்ட தேர்தல் திருவிழா இன்று தொடங்குகிறது. இதில் முதல் கட்டமாக 102 மக்களவை தொகுதிகளிலும் 92 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற உள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இத்துடன் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது.

இதில், 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ள பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியாக ஒன்றிணைந்து களமிறங்கி உள்ளன. அனைத்து கட்சிகளும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்ட நிலையில், மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ளது.

இதில், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவுடன் தேர்தல் திருவிழா தொடங்குகிறது. இத்துடன், அருணாச்சல பிரதேசம் (60), சிக்கிம் (32) மாநிலங்களில் ஒரே கட்டமாக 92 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக மேற்கொண்டுள்ளார்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்காக 1.87 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 18 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று, இன்று தங்கள் ஜனநாயக கடமையாற்ற உள்ளனர். இதில் 8.4 கோடி பேர் ஆண்கள், 8.23 கோடி பேர் பெண்கள், 11,371 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

மொத்தம் 1,625 வேட்பாளர்களின் தலைவிதியை முதல்கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. இதில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல்கட்ட தேர்தல் சிறப்பம்சங்கள்

* இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள 102 மக்களவை தொகுதிகளில் கடந்த 2019 தேர்தலில் பாஜ கூட்டணி 41 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும் வென்றுள்ளன.

* முதல்கட்ட தேர்தலில் 35.67 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தங்கள் முதல் வாக்கை செலுத்த உள்ளனர். 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 3.51 கோடி பேர் உள்ளனர்.

* 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

* 361 தேர்தல் பார்வையாளர்கள் ஏற்கனவே தங்களுக்கான தொகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

* தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த 4,627 பறக்கும் படை, 5,208 புள்ளிவிவர கண்காணிப்பு குழு, 2028 வீடியோ கண்காணிப்பு குழு, 1,255 வீடியோ பார்வையாளர் குழு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Related posts

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா