‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனத்தில் ரூ.5,900 கோடி மோசடி ரூ.100 கோடி வசூலித்த காஞ்சி ஏஜென்டுகள் 2 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ‘ஐஎப்எஸ்’ என்ற பெயரில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. தமிழ்நாடு முழுவதும் கிளைகள் தொடங்கி பொதுமக்களிடம் ரூ.5,900 கோடி வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் உத்தரவின் படி ஐஜி ஆசியம்மாள் மேற்பார்வையில் ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய ஏஜெண்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜென்டுகளாக காஞ்சிபுரம் அடுத்த பெரிய கரும்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் வெங்கடேசன் மற்றும் பிரபு ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக காரை, கோவிந்தவாடி அகரம், பரந்தூர், பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரூ.100 கோடி வரை வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பணம் கட்டிய மக்கள் நெருக்கடி கொடுத்ததால், வெங்கடேசன் மற்றும் பிரபு ஆகியோர் பணம் கட்டியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும் என வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

அந்த தகவல் வேகமாக பரவியது. உடனே இருவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த பொதுமக்கள் அனைவரும் இருவரின் வீட்டின் அருகே நேற்று ஒன்று கூடினர். அப்பொழுது முழு தொகை கொடுக்க முடியாது ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே தரமுடியும் என வெங்கடேசன் மற்றும் பிரபு ஆகியோர் கூறியதால் பாதிக்கப்பட்ட மக்கள் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டிலேயே மக்கள் சிறை வைத்தனர்.இது குறித்து பாலுச்செட்டி போலீசார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.2 லட்சம் பணம், செல்போன்கள், லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்