3 ஆண்டு சிறை தண்டனை சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சரணடைய விலக்களித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. அதில், ‘‘ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.175 கோடி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக தொடர்ந்துள்ளது என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விரிவாக விசாரணை நடத்திய விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மேற்கண்ட இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. மேலும் வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனை என்பது மூன்று வருடம் தான் என்பதால் பொன்முடி சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உத்தரவு என்பது இதே வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி விசாலாட்சிக்கும் பொருந்தும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து