சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் எடுத்து வந்த ரூ.3.84 கோடி தங்க நகைகள் அதிரடி பறிமுதல்: 10 பேர் கைது

திருமலை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வந்த ரயிலில் எடுத்து வந்த ரூ.3.84 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் இருந்து, மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கு ரயிலில் தங்கம் கடத்தி வருவதாக கோதாவரி மாவட்ட எஸ்பி ரவிபிரகாஷ்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் பீமவரம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்றிரவு போலீசார் தீவிர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து வந்த ரயிலில் சந்தேகப்படும்படி பையுடன் இறங்கிய 10 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில் 6 கிலோ 92 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள், 49,970 ரொக்கப்பணம் ஆகியவை இருந்தது. இதுதொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அந்த நகைகளுக்கான ரசீது எதுவும் இல்லாமல் வரி ஏய்ப்பு செய்து கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.3.84 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தங்க நகைகள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது? ஆவணங்கள் இன்றி யாருக்கு இந்த நகைகள் எடுத்து செல்லப்படுகிறது? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் தங்க நகைகள் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்