கர்நாடக அரசின் 2ம் கட்ட விரிவாக்கம்; 24 அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாவது கட்ட அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை பதவி காலம் இம்மாதம் முடியும் நிலையில் 16வது சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ்-135, பாரதிய ஜனதா கட்சி-66, மதச்சார்பற்ற ஜனதா தளம்-19, மற்றவை 4 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடித்தது. அதை தொடர்ந்து கடந்த 20ம் தேதி புதிய அரசு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே. சிவகுமார் மற்றும் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதை தொடர்ந்து மங்களூரு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் யு.டி.காதர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கடந்த புதன்கிழமை மாலை டெல்லி சென்றனர். கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோருடன் கடந்த மூன்று நாட்கள் ஆலோசனை நடத்தினர்.

இதில் ஒரே கட்டமாக 24 அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியல் இறுதி செய்த பின் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் ஒப்புதல் பெற்றனர். இதையடுத்து இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று காலை 11.45 மணிக்கு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் கோலாகலமாக நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், சபாநாயகர் யு.டி.காதர் ஆகியோர் முன்னிலையில் எச்.கே. பாட்டீல், தினேஷ் குண்டுராவ், சந்தோஷ் லாட், ரஹீம்கான், டாக்டர் சரணபிரகாஷ்பாட்டீல், சரணபசப்பா தர்ஷ்னாபூர், வெங்கடேஷ், பி. நாகேந்திரா, லட்சுமி ஹெப்பால்கர், கிருஷ்ணபைரேகவுடா, என்.செலுவராயசாமி, டாக்டர் எச். சி. மகாதேவப்பா, ஈஸ்வர்கண்ட்ரே, கே. என். ராஜண்ணா,

சிவானந்த பாட்டீல், ஆர். பி. திம்மாபுரே, எஸ். எஸ். மல்லிகார்ஜுன், சிவராஜ் தங்கடகி, மங்காள வைத்யா, என்.எஸ்.போஸ்ராஜூ, டி.சுதாகர், பி. எஸ். சுரேஷ், மது பங்காரப்பா மற்றும் டாக்டர் எம். சி. சுதாகர் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு அமைச்சருக்கும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் புதியதாக பதவி ஏற்றவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் பதவி ஏற்ற போது ஆதரவாளர்கள் கைகள் தட்டி ஆராவாரம் செய்தனர். விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை வளாகம் விழா கோலம் பூண்டு இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களில் இரண்டு கட்டங்களாக முழு அமைச்சரவை உருவாக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாலை முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் 32 அமைச்சர்கள் என அனைவருக்கும் துறைகள் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மாநில காங்கிரஸ் அரசு முழுமையாக ஆட்சி நிர்வாகத்தை தொடங்கியுள்ளது.

 

Related posts

மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது..!!

மதுரையில் தந்தையை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனிடம் போலீஸ் விசாரணை..!!

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!