ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது கர்நாடகாவில் 75% வாக்குப்பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை; காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சி-224, காங்கிரஸ்-223, மஜத-209 உள்பட 2,615 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் இருந்தனர். கடந்த 15 நாட்களாக பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு 58,545 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் பணியில் 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 84,119 மாநில போலீசார், 58,500 சிஏபிஎப் போலீசார் மற்றும் 650 பெட்டாலியன் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளிமாநிலங்களை இணைக்கும் சாலையில் 185 சோதனை சாவடிகள், 100 கலால் துறை சாவடிகள், மாவட்டங்கள் இடையில் 100 சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டம் ஷிக்காவியிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா தங்கள் குடும்பத்தினருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ஷிகாரிபுராவிலும் வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது குடும்பத்துடன் ஹாசன் மாவட்டத்தின் ஹொளேநரசிபுராவிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மைசூரு மாவட்டத்தின் உள்ள சித்தராமணஹுண்டி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் பி.எம்.எஸ். கல்லூரியில் வாக்களித்தார். மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடந்தது. மாநிலத்தின் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்ததால், காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

ரெய்ச்சூர், விஜயபுரா, கதக், ஹுப்பள்ளி-தார்வார், பெங்களூரு நகரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள் இடையில் கடும் வாக்குவாதமும் தள்ளு-முள்ளு, அடிதடி நடந்தது. சில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். மற்றபடி மாநிலத்தில் பெரியளவில் கலவரம் ஏதுமில்லாமல், அமைதியாக நடந்து முடிந்ததாக மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி பிரவீன்சூட் தெரிவித்தார். இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 9 தனியார் நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

* கருத்துகணிப்பு சொல்வது என்ன?
எண் நிறுவனங்கள் பாஜ காங்கிரஸ் மஜத மற்றவை
1 இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா 62-80 122-140 20-25 0-3
2 நியூஸ் 24- டுடே சாணக்கியா 92 120 12 0
3 ரிபப்ளிக்-பி.மார்க் 85-100 94-108 24-32 2-6
4 ஏசியாநெட் சுவர்ணா நியூஸ்-ஜான் கி பாத் 94-117 91-106 14-24 0-2
5 ஜீ நியூஸ்-மாட்ரைஸ் 79-94 103-118 25-33 2-5
6 ஏபிபி-சி ஓட்டர் 83-95 100-112 21-29 2-6
7 டிவி9 பாரத்-போல்ஸ்டார்ட் 88-98 99-109 21-26 0-4
8 டைம்ஸ் நவ் 85 113 23 3
9 இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் 85 115 22 1-2

* காஸ் சிலிண்டருக்கு பூஜை
கர்நாடகாவின் வாக்குச்சாவடிகளுக்கு அருகே பூத் சிலிப் வழங்க காங்கிரஸ் அமைத்திருந்த மையங்களில் சமையல் காஸ் சிலிண்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், விலை ரூ.1,200 என்று காகிதத்தில் கட்டி தொங்க விட்டிருந்தனர். அந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் பூஜை செய்தனர். இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.

Related posts

வைகை அணையில் பாசனத்துக்காக நீர் திறப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது

மே-22: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை